கடலூா் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
கடலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ படிப்பு படிக்காத பலர், கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் போலீசாருடன் இணைந்து மருத்துவத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அந்த வகையில் சிதம்பரம் மந்தக்கரையில் உள்ள ஒரு கிளினிக்கில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த கிளினிக் உரிமையாளர் லட்சுமி நாராயணன் மகள் சுதா (வயது 36) என்பவர் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவரான சுதாவை கைது செய்தனர். மேலும் அவரது கிளினிக்கில் இருந்த மருந்துகளை, மருத்துவ குழுவினர் பறிமுதல் செய்தனர்.
மருந்துகள் பறிமுதல்
இதேபோல் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் அடுத்த சாத்திப்பட்டில் உள்ள மெடிக்கலில் சோதனை செய்த போது, அங்கு பண்ருட்டி எல்.என்.புரத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் பழனி (44) மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மெடிக்கலில் இருந்த மருந்துகளை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து பழனியை கைது செய்தனர்.
இதேபோல் போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி அறிந்து, சேத்தியாத்தோப்பை சேர்ந்த முருகன், திட்டக்குடி சண்முகசுந்தரம், செந்தாமரைக்கண்ணி (43), ஸ்ரீமுஷ்ணம் சரவணன் ஆகியோர் தங்கள் கிளினிக் மற்றும் மெடிக்கல்லை மூடி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இருப்பினும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் மருத்துவ படிப்பு படிக்காமல் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது. இதனால் முருகன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.