உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
தலைமை செயலகத்தில் இருந்து பேசுவதாகக்கூறி உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி
வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் பேசுவதாக தொடர்பு கொண்டு ஒருவர் பேசி உள்ளார்.
அப்போது அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உங்கள் மீது புகார்கள் வந்துள்ளது. நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மிரட்டிஉள்ளார்.
விசாரணைக்கு அழைப்பு
இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து, அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில் அந்த செல்போன் ட்ரு காலரில், 'சிவக்குமார் ஐ.ஏ.எஸ். இணை செயலாளர் தமிழ்நாடு' என பதிவு செய்யப்பட்டு இருந்தது. விசாரணையில் அதுபோன்று யாரும் தலைமை செயலகத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கணியம்பாடி ஒன்றியக்குழு துணைத்தலைவருமான கஜேந்திரன் என்பவரையும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னை வரும்படி அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி
இதனால் சந்தேகம் அடைந்த கஜேந்திரன் இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார், அந்த நபர் இருக்கும் இடத்தை செல்போன் டவர் மூலம் கண்காணித்தனர். அதில் அவர் சென்னையில் இருப்பது தெரிய வந்தது.
அதன்படி போலீசார் விரைந்து சென்று சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்து வேலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பதும், செல்போன் மூலம் பலரை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் சுபாஷை கைது செய்து வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.