கள்ளச் சாராய உயிரிழப்பு: சமூக போராளிகள், நடிகர்கள் குரல் கொடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி தாக்கு
2 ஆண்டு காலம் திமுக அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "மரக்காணம் எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலருக்கு கண் பார்வை, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சித்தாமூரில் போலி மதுபானம் அருந்தி 5 பேர் இறந்துள்ளனர். இது துயரமான சம்பவம்.
2 ஆண்டுகளில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் தடையின்றி நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் போலிமது விற்பனையை தடுக்க குழு அமைக்கபட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அது இல்லை. தற்போது சம்பவம் நடைபெற்றவுடன் இரண்டே நாட்களில் சுமார் 1,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்.
போலி மதுபான, கள்ளச்சாராய விற்பனை காவல்துறைக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அரசும், போலீசும் தவறிவிட்டதால், பல உயிர்களை இழந்துள்ளோம். விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கு யார் பொறுப்பேற்பது.
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தால் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. நாங்கள் பதவியேற்றால் தேனாறும், பாலாறும் ஓடும் என்றார்கள். தற்போது தமிழகத்தில் சாராய ஆறு தான் ஓடுகிறது. ஆளுங்கட்சியின் அதிகார பலத்தோடு விற்பனை நடைபெற்று வருகிறது.
நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாதவராக முதல்-அமைச்சர் உள்ளார். அரசின் மெத்தனத்தால் பல உயிர்கள் போயுள்ளது. கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகவேண்டும்.
இந்த துறை அமைச்சரை நீக்க வேண்டும். அரசாங்கமே மது பானம் அருந்த ஆதரவு கொடுக்கிறது. திருமணம், விளையாட்டு மைதானத்தில் மது பானம் குடிக்கலாம் என அரசாங்கம் கூறுகிறது. செந்தில்பாலாஜி பத்து சதவிகிதம் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின் போது சமூக போராளிகள் என்று கூறிக்கொண்டு பல பேர் சாராயம் குறித்து பாட்டு பாடினார்கள்.. அவர்கள் எல்லாம் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. இன்னும் பல சமூக போராளிகள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அனைவரும் திமுக அரசின் கைகூலியாக செயல்படுகிறார்கள். இவ்வளவு உயிர் போயுள்ளது. இதுவரை எந்த சமூக போராளியும், நடிகரும் குரல் கொடுக்கவில்லை. திமுகவின் கூட்டணியில் உள்ளவர்கள் கூட இச்சம்பவம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.