போலி வட்டார போக்குவரத்து அலுவலர் கைது


போலி வட்டார போக்குவரத்து அலுவலர் கைது
x

வாணியம்பாடி அருகே பள்ளி, கல்லூரி வாகனங்களை சோதனை மேற்கொண்ட போலி வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

பஸ்சை நிறுத்தி சோதனை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் இயங்கி வரும் தனியார் பெண்கள் கல்லூரிக்கு, வக்கணம்பட்டி என்ற பகுதியில் இருந்து மாணவிகளை ஏற்றிகொண்டு வாணியம்பாடி நோக்கி வந்த கல்லூரி பஸ்சை 2 பேர் வழியில் நிறுத்தினர். பின்னர் அவர்களில் ஒருவர் தன்னை வட்டார போக்குவரத்து அலுவலர் என்றும், வாகனங்களை சோதனை செய்ய சிறப்பு அலுவலராக அரசு நியமித்துள்ளதாகவும் கூறி பஸ்சை சோதனை செய்துள்ளனர்.

பின்னர் அந்த பஸ்சுக்கு அபராதம் விதிப்பதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பஸ் டிரைவர் கல்லூரி நிர்வாகத்திற்கு அவர்களுடைய புகைப்படத்துடன் தகவல் அனுப்பியுள்ளார். இந்த தகவலை கல்லூரி நிர்வாகம் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தனர்.

போலி வட்டார போக்குவரத்து அலுவலர்

பின்னர் அங்கிருந்து சென்ற 2 பேரும் வாணியம்பாடி அருகே உள்ள சின்னகல்லுபள்ளி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சென்று, வட்டார போக்குவரத்து அலுவலர் என்று அறிமுகம் செய்து கொண்டு, பள்ளி பஸ்களை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை சோதனை மேற்கொண்டனர்.

இதுபற்றி தகவலறிந்த வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட்ராகவன் ஆகியோர் அந்த பள்ளிக்கு சென்றனர். அதற்குள் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். வட்டார போக்குவரத்து அலுவலர் என்று கூறிய நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மதுரை பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 45) என்பதும், வட்டார போக்குவரத்து அலுவலர் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களின் வாகனங்களை சோதனை செய்ததும் தெரிய வந்தது.

கைது

அதைத்தொடர்ந்து வாணியம்பாடி தாலுகா போலீசாரை வரவழைத்து அவரை ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து இவர்கள் எவ்வளவு நாட்களாக வட்டார போக்குவரத்து அலுவலர் என்ற போர்வையில் போலியாக எந்த, எந்த பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர் என்றும், தப்பி ஓடியவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story