கம்பம் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை

கம்பம் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வாழை, தென்னை, திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் விளையும் தேங்காய், இளநீர் உள்ளிட்டவை வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதற்கிடையே திராட்சை, புடலை, பப்பாளி மற்றும் காய்கறி சாகுபடி செய்த விவசாயிகள் பலரும் போதிய வருமானம் இல்லாததால் மாற்று விவசாயமான தென்னை விவசாயத்திற்கு மாறியுள்ளனர். இதனால் தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்து, படிப்படியாக தேங்காய் உற்பத்தி உயர்ந்து வருகிறது. அதேபோல் தேங்காய் வரத்தும் அதிகரித்ததால் அவற்றின் விலை தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூ.45 வரை விற்பனையான தேங்காய் விலை தற்போது கிலோ ரூ.27-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதால், கம்பத்தில் தேங்காய்களை கொள்முதல் செய்ய வெளியூர் வியாபாரிகள் வரவில்லை. இதனால் தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளன. இதையடுத்து முதல் ரக தேங்காய்களை கொப்பரைக்கும், 2-ம் தர தேங்காய்களை சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பி வருகிறோம். ஆனாலும் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. எனவே விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தேங்காய்க்கு உரிய ஆதார விலை நிர்ணயம் செய்து, அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.






