காரியாபட்டி பகுதியில் பருத்தி விலை வீழ்ச்சி


காரியாபட்டி பகுதியில் பருத்தி விலை வீழ்ச்சி
x

காரியாபட்டி பகுதியில் பருத்தி விைல வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி பகுதியில் பருத்தி விைல வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பருத்தி சாகுபடி

காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பகுதியில் மழை பெய்தால் தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. மழை பெய்து கண்மாய் பெருகினால் நெல் விவசாயம் நன்கு நடைபெறும். இந்த பகுதியில் அதிக அளவில் வயல்களில் நெல் விவசாயம் நடைபெறுவது வழக்கம். பின்னர் விவசாயிகள் போர்வெல் அமைத்து கோடை காலத்தில் வயல்களில் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

மகசூல் குறைவு

காரியாபட்டி ஒன்றியம் சத்திரம் புளியங்குளம், பாப்பணம், அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி, வெற்றிலைமுருகன்பட்டி, மறைக்குளம், சொக்கனேந்தல், சித்தனேந்தல், ஸ்ரீராம்பூர், இலுப்பைகுளம், டி.வேப்பங்குளம், ஆவியூர், அரசகுளம், மாங்குளம், குரண்டி, கீழ உப்பிலிக்குண்டு, கல்லுப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பருத்தி விவசாயம் செய்யும் போது விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல் இல்லாததால் பருத்தியில் நோய் தாக்கி மகசூல் குறையும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

விலை சரிவு

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

காரியாபட்டி பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் பருத்தியை சாகுபடி செய்துள்ளனர். தற்போது 2 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஒரு கிலோ பருத்தி ரூ.110 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி விலை ரூ. 50-க்கு விற்பனை ஆகிறது.

பாதிக்கு பாதி விலை குறைந்து உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். விலை சரிவுக்கு சாகுபடி பரப்பளவு தற்போது அதிகரித்ததும் ஒரு காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். பருத்தி விவசாயம் செய்யும் கிராமங்களுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு எந்த நேரத்தில் எந்த உரம், பூச்சி மருந்து தெளிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் செய்ய வேண்டும். மேலும் இந்த ஆண்டு பருத்தியின் விலை மிகவும் குறைந்துள்ளது. எனவே பருத்திக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story