தவறி விழுந்த குழந்தை பலி


தவறி விழுந்த குழந்தை பலி
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே தந்தை தூக்கி விளையாடியபோது தவறி விழுந்து குழந்தை ஒன்று பலியானது.

திண்டுக்கல்

வடமதுரையை அடுத்த சுக்காம்பட்டி அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் காந்திவேல் (வயது 29). கொத்தனார். அவருடைய மனைவி பேச்சியம்மாள் (26). இந்த தம்பதிக்கு ருத்ராதேவி (5) என்ற மகளும், கபிலன் (1½) என்ற மகனும் இருந்தனர். காந்திவேலின் பெற்றோர், கன்னிவாடி அருகே உள்ள மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் விவசாய தோட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி காந்திவேல், தனது குடும்பத்தினருடன் மயிலாப்பூருக்கு சென்றிருந்தார். அப்போது காந்திவேல், தனது மகன் கபிலனை தூக்கி விளையாடி கொண்டிருந்தார். அப்போது கை தவறி கபிலன் கீழே விழுந்து காயமடைந்தான். இதனையடுத்து காந்திவேலின் குடும்பத்தினர், குழந்தையை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கபிலன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் பேச்சியம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story