தக்காளி விலை வீழ்ச்சி; கிலோ ரூ.47-க்கு விற்பனை
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.47-க்கு விற்பனையானது.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.47-க்கு விற்பனையானது.
வரத்து அதிகரிப்பு
கிணத்துக்கடவில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி வரத்து மிகவும் குறைந்து இருந்தது. மேலும் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி அறுவடை இறுதி கட்டத்தை எட்டியதால், வரத்து சரிந்தது. இதனால் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.86-க்கு விற்பனையானது. மேலும் கடைகளில் ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி விலை உயர்ந்ததால், இதை வாங்கும் அளவை பெண்கள் குறைத்தனர். இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு பின்னர் கர்நாடகா மாநிலம் மைசூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது. இதனால் தக்காளி விலை குறைந்து வருகிறது. கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் நடந்த ஏலத்தில் தக்காளி கிலோ ரூ.47-க்கு விற்பனையானது.
விலை வீழ்ச்சி
கடந்த 2 வாரத்தை ஒப்பிடும் போது, ஒரு கிலோவுக்கு ரூ.39 குறைவாக ஏலம் போனது. தக்காளி விலை குறைந்து உள்ளதால், காய்கறி கடைகளில் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை வீழ்ச்சியால் பெண்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து மொத்த வியாபாரிகள் கூறும்போது, தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் வருகிற நாட்களில் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மைசூரு பகுதிகளில் இருந்து தக்காளி அறுவடை அதிகமாக நடந்து வருகிறது. இதனால் விலை மேலும் குறையும் என்றனர்.