கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்துதி.மு.க.-ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதலால் தனபால் பொய்யான தகவல் பரப்புகிறார்சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் பேட்டி

சேலம்
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து தி.மு.க. அரசு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதலால் தனபால் என் மீது பொய்யான தகவல் பரப்பி வருகிறார் என்று சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி, ராஜமுத்து, மணி, முன்னாள் அரசு வக்கீல் சரவணன் ஆகியோர் நேற்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் மீது புகார் கொடுத்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே வைத்து பை ஒன்று கொடுத்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறானது. அதுமட்டுமல்ல கனகராஜ் விபத்தின் போது தனபால் ஆத்தூர் போலீஸ் நிலையம் அருகே செய்தியாளர்களிடம் கூறும் போது, என்னை பற்றி எதுவும் பேசவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்குக்கும், எனது தம்பிக்கும் (கனகராஜ்) எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொய்யான தகவல்
ஆனால் தற்போது தி.மு.க. அரசு மற்றும் அதன் பி டீமாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதலின் பேரில் தனபால் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான அவர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்ததில் தனக்கு மனநிலை பாதிப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதனுடன் டாக்டர்களின் மருத்துவ அறிக்கையும் இணைத்துள்ளார். அதன்படி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மனநிலை பாதிக்கப்பட்ட தனபாலின் கருத்து பெரிதாக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அவரது மனைவி வந்து சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூட அவர் தனது கணவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தனக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதற்கிடையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனபால் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற போது டாக்டர்கள் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கை
அதனால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சிலரின் தூண்டுதலின் பேரில் என் மீது குற்றச்சாட்டு தெரிவிப்பதால் தனபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோர்ட்டு விசாரணையில் இருப்பதால் வேறு எதுவும் கூறமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.






