பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி


பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
x

தனது கூட்டாளியை சென்னையில் சுட்டுக்கொன்று, உடலை துண்டுகளாக வெட்டி தாமிரபரணியில் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க விருதுநகர் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

விருதுநகர்


தனது கூட்டாளியை சென்னையில் சுட்டுக்கொன்று, உடலை துண்டுகளாக வெட்டி தாமிரபரணியில் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க விருதுநகர் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

கூட்டாளி சுட்டுக்கொலை

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து வந்தார். இந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வரிச்சியூர் செல்வத்தைவிட்டு பிரிந்து செந்தில்குமார் விருதுநகர் திரும்பினார்.

இந்தநிலையில் மதுரை டி.குன்னத்தூர் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 2 பேர் கொலை வழக்கில் குற்றவாளியாக செந்தில்குமார் சேர்க்கப்பட்டார். எனவே அவரை சென்னைக்கு சென்றுவிடுமாறு வரிச்சியூர் செல்வம் அனுப்பினார். பின்னர் தனது கூட்டாளிகள் மூலம் சென்னையில் வைத்து செந்தில்குமாரை சுட்டுக் கொலைசெய்து, உடலை துண்டுகளாக வெட்டி தாமிரபரணி ஆற்றில் வீசியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

எனவே தனிப்படை போலீசார் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

போலீஸ் காவல்

செந்தில்குமார் கொலை சம்பவத்தில் தொடர்புடைய வரிச்சியூர் செல்வத்தின் மற்ற கூட்டாளிகளை போலீசார் தேடி வரும் நிலையில் வரிச்சியூர் செல்வத்தை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மாஜிஸ்திரேட்டு கவிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது வரிச்சியூர் செல்வமும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

5 நாள் அனுமதி

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு கவிதா அனுமதி வழங்கினார். விசாரணைக்குப்பின் வருகிற 1-ந் தேதி மாலை 5 மணிக்கு அவரை கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு காருன்காரத் தலைமையிலான தனிப்படை போலீசார், வரிச்சியூர் செல்வத்தை விசாரணைக்காக அருப்புக்கோட்டைக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.


Next Story