இறால் பண்ணைகளை தடைசெய்ய கோரிக்கை


இறால் பண்ணைகளை தடைசெய்ய கோரிக்கை
x

உடலுக்கும் மண்ணிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தடைசெய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்துவதால் ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள இறால்பண்ணைகளை தடை செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யூ. கடல் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுரம்


உடலுக்கும் மண்ணிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தடைசெய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்துவதால் ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள இறால்பண்ணைகளை தடை செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யூ. கடல் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவு பகுதியில் அரியாங்குண்டு முதல் வடகாடு வரையிலான 12 கிராமங்களில் நீர்வளம் மற்றும் நிலவளத்தை இறால் பண்ணைகள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த பகுதி கடற்கரையோரங்களில் சுண்ணாம்பு கற்களையும் பவளப்பாறைகளையும் உடைத்து பல நூறு ஏக்கர் நிலங்கள் கடலுக்குள் செல்வதற்கு காரணமான இறால் பண்ணைகளை தடை செய்யக்கோரி கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறால் பண்ணைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

அதற்கு மாறாக தற்போது கூடுதலாக இறால் பண்ணைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த அனுமதி அரசின் கடலோர மீன் வளர்ப்பு ஆணைய சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்படவில்லை. தற்போதைய நிலையில் ராமேசுவரம் தீவு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் அனுமதியோடும், அனுமதியின்றியும் செயல்பட்டு வருகின்றன.

இந்த அனுமதியும் ஒரு பண்ணைக்கு பெற்று பல பண்ணைகளை செயல்படுத்தி வருகின்றன. இந்த அனைத்து இறால் பண்ணைகளிலும் அரசால் தடைசெய்யப்பட்ட 4 வகையான ரசாயன மருந்துகளை இறால் வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரசாயன மருந்துகள் மூலம் வளரும் இறால் மீன்களை உட்கொள்ளும் மனிதர்களுக்கு பல்வேறு அபாயகரமான நோய்கள் வந்த வண்ணம் உள்ளன.

உத்தரவு

இதுதவிர, இந்த ரசாயன மருந்துகளால் அந்த பகுதி நிலத்தடி நீரும், நிலமும் பாதிக்கப்படுகிறது. மேலும், இறால் பண்ணை கழிவுகளை சுத்திகரித்துதான் வெளியில் விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அந்த கழிவுகளை அப்படியே பஞ்சகல்யாணி ஆற்று பகுதியில் விட்டு வருகின்றனர்.

இதனால் அந்த பகுதி நிலம் பாதிக்கப்பட்டு உள்ளதோடு சுற்றி உள்ள 12 கிராமங்களில் தென்னை, பனை மரங்கள் கருகிவிட்டன. நச்சுத்தன்மை காரணமாக மக்களுக்கு புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட கலெக்டர் ராமேசுவரம் தீவு பகுதியில் நேரில் ஆய்வு செய்து இதுபோன்ற இறால் பண்ணைகளை தடை செய்து தீவு மக்களையும் புண்ணியதலத்தையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story