காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு உபரிநீர் இணைப்பு கால்வாய் திட்டம் நிறைவேறுமா ? விவசாயிகள் எதிர்பார்ப்பு
எலச்சிபாளையம்:
காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு உபரிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நாமக்கல் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மேட்டூர் அணை உபரிநீர்
இந்த ஆண்டு தொடக்கம் முதலே இயல்பை காட்டிலும் அதிக மழை பெய்தும், மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியும், நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 40 ஏரிகளுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். ஆனால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. இதனை ஏரிகளில் நிரப்ப காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு உபரிநீர் இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நாமக்கல், சேலம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு இணைப்பு கால்வாய் திட்டம் சாத்தியமில்லை என்று தமிழக ஆட்சியாளர்கள் கைவிரித்தாலும், காவிரி தொழில்நுட்பக்குழுவின் தலைவராக இருந்து அண்மையில் மறைந்த மோகன் கிருஷ்ணன், இந்த திட்டம் சாத்தியமானது என்றும், தேவையான ஒன்று என்றும் திட்டத்தை வகுத்து, திட்ட மதிப்பீட்டை கடந்த 11.5.1994 அன்று தமிழக அரசிடம் சமர்ப்பித்தார். அன்று இந்த திட்டத்தை நிறைவேற்ற மதிப்பீடு ரூ.380 கோடி என்று அவர் கணக்கிட்டு இருந்தார். ஆனால் தற்போது இந்த திட்டத்தை நிறைவேற்ற திட்ட மதிப்பீடு பலமடங்கு உயர்ந்து விட்டது.
தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும்
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண்பாலம் வழியாக ஆண்டுதோறும் உபரியாக வெளியேற்றப்படும் 40 டி.எம்.சி. முதல் 50 டி.எம்.சி. நீரானது காவிரியில் சென்று கடலில் கலந்து வீணாவதை தடுக்க முடியும். உபரிநீரில் இருந்து வெறும் 5 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி சேலம், நாமக்கல் மாவட்டங்களை முழுமையாக வறட்சியின் பிடியில் இருந்து விடுவித்து விடலாம்.
மேட்டூர் அணையில் இருந்து 182 கி.மீட்டர் தொலைவுக்கு கால்வாய் அமைத்து காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதியை இணைப்பதுதான் மேட்டூர் அணை உபரிநீர் திட்டமாகும். இந்த திட்டத்துக்காக மொத்தம் 5 கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும். மேட்டூர் அணை முதல் சரபங்கா நதிவரை 40 கி.மீட்டருக்கும், சரபங்கா நதி முதல் திருமணிமுத்தாறு வரை 24 கி.மீட்டருக்கும், திருமணிமுத்தாறு முதல் கரைபோட்டான் நதி வரை 46 கி.மீட்டருக்கும், கரைபோட்டான் நதி முதல் அய்யாறு வரை 44 கி.மீட்டருக்கும், அய்யாறு முதல் மாவடியாறு வரை 28 கி.மீட்டருக்கு கால்வாய் அமைத்து மாவடியாற்றில் இருந்து வசிஷ்ட நதியை இறுதியாக இணைக்க வேண்டும்.
நிலத்தடி நீர்மட்டம்
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, தாத்தையங்கார்பேட்டை ஆகிய பகுதிகள் நிரந்தரமாக பயன்அடையும். சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் 32 ஆயிரத்து 423 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதிபெறும். இதன்மூலம் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்பாடு அடைந்து, கூடுதலாக 18 ஆயிரத்து 228 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
எனவே மேட்டூர் அணை உபரிநீரை சேமிக்க காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு உபரிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பதே விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
ரூ.15 ஆயிரம் கோடி தேவை
இதுகுறித்து எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் கூறியதாவது:-
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரிநீர் திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம் குறித்து தேர்தல் காலத்தில் வாக்காளர்களிடம் வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அரசியல் கட்சியினர் அதனை கண்டு கொள்ளாத நிலை உள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இத்திட்டத்திற்கு சட்டசபையில் நிதி ஒதுக்கீடு சம்பந்தமான அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இன்று வரை இத்திட்டம் சம்பந்தமாக ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் மெத்தனை போக்கில் இருந்து வருகின்றனர். கடந்த 2003-ம் ஆண்டு அறிவித்தபோது சுமார் ரூ.2,300 கோடி செலவாகும் என அரசு அறிவித்தது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி இத்திட்டத்திற்கு தேவைப்படுகிறது. காலங்கள் தாழ்த்துகிறபோது திட்டத்திற்கு கூடுதல் செலவு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் 29 ஊராட்சிகள் உள்ளன. இவை குடிநீர் தட்டுப்பாடு நிறைந்த பகுதிகளாக உள்ளன. எனவே திருமணிமுத்தாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.