நீண்ட கால பயிர் சாகுபடி அதிகரிப்பால் உணவு தானியம் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது- வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தகவல்


நீண்ட கால பயிர் சாகுபடி அதிகரிப்பால் உணவு தானியம் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது- வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தகவல்
x

ஈரோடு மாவட்டத்தில் நீண்ட கால பயிர் சாகுபடி அதிகரிப்பால் உணவு தானிய சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நீண்ட கால பயிர் சாகுபடி அதிகரிப்பால் உணவு தானிய சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

வேளாண் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதைத்தொடர்ந்து விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாரச்சந்தைகள், மார்க்கெட்டுகளில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. வாரச்சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் ஏலம் விடப்பட்ட தொகையை விட கூடுதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. எனவே சுங்க கட்டண விவரத்தை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற வசிப்பிடத்தில் உள்ள சங்கத்தை மட்டுமே அணுக வேண்டும் என்ற நிபந்தனையை விலக்கிக்கொள்ள வேண்டும். நிலம் உள்ள இடத்தின் அருகில் உள்ள சங்கத்தில் பயிர்கடன் பெற அனுமதி அளிக்க வேண்டும்.

தண்ணீர் திருட்டு

பட்டா மாறுதலுக்கு மிகுந்த காலதாமதம் ஏற்படுவதை தவிர்த்து உடனடியாக பட்டா கிடைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். ஆள் பற்றாக்குறை, உரிய விலை இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களினால் உணவு தானிய சாகுபடி பரப்பு குறைந்து, நீண்ட கால பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. இதனால் உணவு தானிய உற்பத்தி குறைந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆயக்கட்டு பாசன பகுதிகளில் விவசாய பயன்பாட்டுக்கு 10 குதிரை சக்தி அளவுக்கு மேல் அனுமதி கிடையாது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் பல ஆயக்கட்டு பகுதிகளில் 100 குதிரை சக்தி வரை மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு பாசன தண்ணீர் திருடப்படுகிறது. இதுபோல் கோர்ட்டு உத்தரவை மீறி ஒரே கிணறுக்கு பல மின் இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு நிதியாண்டுக்கான குடிமராமத்து திட்ட நிதியை விரைந்து அரசிடம் பெற்று நீர் நிலைகளை சீரமைக்க வேண்டும். மலை கிராமத்தில் நிபந்தனை பட்டா நிலத்தில் மரங்களை வெட்டி, மலையில் பள்ளம் தோண்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாய கழிவுநீர்

காலிங்கராயன் வாய்க்காலில் அதிகப்படியாக சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கிறது. காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக தொழிற்சாலைகள் மூலம் குழாய் பதிக்கப்பட்டு உள்ளன. இந்த குழாயின் வழியாக நல்ல தண்ணீரை எடுத்துக்கொண்டு அதே குழாயில் தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றுகின்றனர். கலர் ரிமோவர் பயன்படுத்தப்பட்டு குளோரின் கலந்து தண்ணீரை வெளியேற்றுகின்றனர். இதனால் தண்ணீரில் கலர் தெரிவதில்லை. மீட்டரை வைத்து பார்த்தால் மட்டுமே தெரியும். ஆனால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த ஒரு இடத்திலும் ஆய்வு செய்வதில்லை. எனவே காலிங்கராயன் வாய்க்காலில் சாயகழிவுகள் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு, அரசு அதிகாரிகள் பதில் அளித்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சந்தோஷினி சந்திரா, வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story