வனவிலங்குகளை தடுக்க ஒலி எழுப்பும் கருவி பொருத்திய விவசாயி கைது


வனவிலங்குகளை தடுக்க ஒலி எழுப்பும் கருவி பொருத்திய விவசாயி கைது
x

வனவிலங்குகளை தடுக்க ஒலி எழுப்பும் கருவி பொருத்திய விவசாயி கைது செய்யப்பட்டார்.

வேலூர்

சிறுத்தை இறந்த சம்பவத்தை தொடர்ந்து வனவிலங்குகளை தடுக்க ஒலி எழுப்பும் கருவி பொருத்திய விவசாயி கைது செய்யப்பட்டார்.

சிறுத்தை சாவு

பேரணாம்பட்டு அருகே உள்ள சேராங்கல் கிராமத்தை சேர்ந்த வேணுமூர்த்திக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 26-ந்தேதி ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது.

அதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினரால் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து எரியூட்டப்பட்டது. சென்னை உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தினர் சிறுத்தையின் உடல் பாகங்களை சேகரித்து ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சிறுத்தை இறந்து கிடந்த நிலத்தின் உரிமையாளர் வேணுமூர்த்தியின் பக்கத்து நிலத்தின் உரிமையாளர் சேராங்கல் கிராமத்தை சேர்ந்த மோகன் பாபு (40) என்பவரை நேற்று மாலை திடீரென பேரணாம்பட்டு வனசரக அலுவலரர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் பிடித்து விசாரணைக்கு வனசரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

கைது

அவர் தனது வீட்டில் இருந்து விவசாய நிலத்திற்கு வனத்துறை அனுமதியின்றி வனவிலங்குகள் வந்தால் அதிர்வை ஏற்படுத்தும் கருவிக்கு வயர் இணைப்பு கொடுத்ததாக மோகன் பாபுவை கைது செய்து அவரிடம் இருந்து பவர் பேட்டரி பாக்ஸ், சைரன், வயர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் மோகன் பாபு குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் இது பல ஆண்டுகளாக செயல்படுவது பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு நன்கு தெரியும். வனச்சரக அலுவலர் நேரில் வந்து பார்வையிட்டு எப்படி இயங்குகிறது என விவசாயிகளிடம் கேட்டறிந்து சென்றுள்ளார். இதனால் வனவிலங்குகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் சிறுத்தை இறந்ததற்கான உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story