டாஸ்மாக் கடை முன்பு குடும்பத்துடன் விவசாயி சமையல் செய்து போராட்டம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே வீட்டில் வாடகைக்கு இயங்கும் டாஸ்மாக் கடையால், தனது மகனுக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள். எனவே கடையை காலி செய்யுமாறு கூறி, விவசாயி தனது குடும்பத்துடன் டாஸ்மாக் கடைமுன்பு சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குணமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கராசு மகன் சுப்பிரமணியன் (வயது 52). விவசாயி. இவருக்கு சரண்யா (26) என்ற மகளும் சக்திவேல் (25), சக்தி (22) என்ற 2 மகன்களும் உள்ளனர். சரண்யாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.
இவர்களுக்கு குணமங்கலம் எல்லையில் மெயின் ரோடு அருகில் உள்ள நிலத்தில் 2 வீடுகள் உள்ளது. இதில் ஒரு வீட்டை கடந்த 2017-ம் ஆண்டு டாஸ்மாக் கடை நடத்துவதற்காக 3 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டு வாடகைக்கு விட்டனர்.
பெண் கொடுக்க மறுப்பு
இந்த நிலையில் மகன் சக்திவேலுக்கு திருமணம் செய்து வைக்க சுப்பிரமணியன் முடிவு செய்தார். இதற்காக அவருக்கு ஏற்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தேடி வந்தார். அப்போது, டாஸ்மாக் கடை நடத்துவதற்கு வீட்டை வாடகைக்கு கொடுத்த உங்கள் குடும்பத்தில் பெண் கொடுக்க முடியாது என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சுப்பிரமணியன், கடந்த 2020-ம் ஆண்டு வீட்டை காலி செய்து, தங்களிடம் ஒப்படைக்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்திடம் தெரிவித்தார். அதன்பின்னரும் தொடர்ச்சியாக அவர் வலியுறுத்தி வந்த போதிலும், கடையை காலி செய்யவில்லை.
சமையல் செய்து போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் குடும்பத்தினர் தங்களது உறவினர்கள் 20 பேருடன் நேற்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் பாய், தலையணை, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்தனர். தெடர்ந்து, அங்கு அடுப்பு கட்டி அதில் சமையல் செய்ய தொடங்கினார்கள். அப்போது, அங்கு டாஸ்மாக் கடையை திறக்க வந்த ஊழியர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்களிடம் நாங்கள் கடையை திறக்க வேண்டும், நீங்கள் கலைந்து செல்லுங்கள் என்று தெரிவித்தனர். இதனால் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதேநேரத்தில் கடையை திறந்ததும் மதுபானம் வாங்குவதற்காக மதுபிரியர்களும் அங்கு குவிய தொடங்கினர்.
10 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும்
இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், இதுபற்றி அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்து, வீட்டு உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், டாஸ்மாக் மேலாளர் சுப்பிரமணியனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வேறு இடத்திற்கு விரைவில் கடையை மாற்றி விடுவதாக டாஸ்மாக் மேலாளர் தெரிவித்தார். இதை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்க மறுத்தனர். இதன்பின்னர், 10 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை காலி செய்யாவிட்டால், கடையை பூட்டி சாவியை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.