விஷ வண்டுகள் கடித்து விவசாய தொழிலாளி சாவு
ஸ்ரீமுஷ்ணம் அருகே விஷ வண்டுகள் கடித்து விவசாய தொழிலாளி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்
தொழிலாளி
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேத்தாம்பட்டு கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 49). விவசாய தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மாலை அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது வழியில் பனை மரத்திலிருந்த நூற்றுக்கணக்கான விஷ வண்டுகள்(கதண்டுகள்) திடீரென்று பறந்து வந்து ரமேசை கடித்தது. இதனால் அலறியடித்துக்கொண்டு அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் விஷ வண்டுகள் அவரை துரத்தி துரத்தி கடித்தன.
பரிதாப சாவு
இதில் விஷம் உடலில் ஏறி கை, கால், முகம் வீங்கி வலியால் ரமேஷ் துடி துடித்து அலறினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.
மனைவி, பிள்ளைகள் கதறல்
ரமேசுக்கு ஜெயந்தி என்ற மனைவி, சுவாதி என்ற மகள், விஷ்வா என்ற மகனும் உள்ளனர். இவர்களில் சுவாதி சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியிலும், விஷ்வா ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 வகுப்பும் படித்து வருகின்றனர். விஷவண்டுகள் கடித்து பலியான கணவரின் உடலை பார்த்து மனைவியும், தந்தையின் உடலை பார்த்து பிள்ளைகளும் கதறி அழுத சம்பவம் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
கிராமமக்கள் சோகம்
இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீயணைப்பு துறையின் மூலம் பனை மரத்தில் இருந்த விஷ வண்டுகளை அழிக்க ஊராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விஷ வண்டுகள் கடித்து விவசாய தொழிலாளி பலியான சம்பவம் தேத்தாம்பட்டு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.