மின் வேலியில் சிக்கி விவசாயி சாவு
திருக்கோவிலூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி சாவு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் காசிராஜா(வயது 54). விவசாயியான இவர் ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் பயிரிட்டுள்ள சோளப்பயிரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதை தடுக்க மின்வேலி அமைத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காசிராஜா பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்காக நிலத்துக்கு சென்றார். அப்போது மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதை மறந்த அவர் மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையறிந்த காசிராஜாவின் குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் தொிவிக்காமல் அவரது உடலை வீட்டுக்குஎடுத்துச்சென்று விட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் தலைமையிலான போலீசார் காசிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.