80 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பலி


80 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பலி
x

சிறுகனூர் அருகே வயலில் உழவு பணியில் ஈடுபட்டு இருந்தபோது, 80 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

திருச்சி

சிறுகனூர் அருகே வயலில் உழவு பணியில் ஈடுபட்டு இருந்தபோது, 80 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 21). விவசாயி. இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது மிளகாய் செடிகள் மீது டிராக்டர் ஏறாமல் இருப்பதற்காக ஓரமாக ஓட்டி சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அங்கிருந்த சுமார் 80 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் டிராக்டர் தவறி விழுந்தது.

இதில், டிராக்டரை ஓட்டி வந்த சதீஷ்குமாரும் டிராக்டருடன் விழுந்தார். இதில் அவர் கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மீட்பு

இது குறித்து அப்பகுதியினர் புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அதிகாரி கோபண்ணா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கிணற்றில் சுமார் 50 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 6 மின்மோட்டார்களை வைத்து கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த டிராக்டரையும், பலியான சதீஷ்குமாரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

கிராமமே சோகத்தில் மூழ்கியது

இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சதீஷ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினரை மட்டுமல்லாது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story