2 பஸ்களுக்கு இடையே சிக்கி விவசாயி சாவு
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் 2 பஸ்களுக்கு இடையே சிக்கி விவசாயி பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48), விவசாயி. இவர் குடியாத்தத்தில் உள்ள அவருடைய அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டு தனியார் பஸ்சில் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு இரவு 9.30 மணியளவில் வந்தார். பின்னர் கிருஷ்ணமூர்த்தி பஸ்சில் இருந்து கீழே இறங்கி நின்று கொண்டிருந்தார்.
அப்போது வேலூர் புதிய பஸ்நிலையத்துக்கு வந்த மற்றொரு தனியார் பஸ், நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சை ஓட்டியபடி கடந்து செல்ல முயன்றது. அப்போது 2 பஸ்களுக்கு இடையே கிருஷ்ணமூர்த்தி சிக்கி உடல்நசுங்கி படுகாயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறிதுநேரத்தில் கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.