பரனூரான் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உழவர் உற்பத்தியாளர் குழுவினர் ஆர்ப்பாட்டம்
பரனூரான் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உழவர் உற்பத்தியாளர் குழுவினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை உழவர் உற்பத்தியாளர் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். அரகண்டநல்லூர் ஆற்றங்கரையில் தொடங்கி புத்தூர் வழியாக 7 கி.மீ. நீளமுள்ள பரனூரான் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும், பரனூர் ஏரியின் கரைகளை பலப்படுத்தி மதகுகளை சரிசெய்ய வேண்டும், உபரிநீர் வெளியேறும் கோடி வாய்க்கால் கரைகளின் தொடக்கப்பகுதியில் இருபுறமும் 300 மீ நீளத்திற்கு சிமெண்டு தடுப்புச்சுவர் அமைத்து கரைகளை பலப்படுத்த வேண்டும், பரனூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கால்நடை துணை சுகாதார நிலையத்தை விரைவில் அமைத்துத்தர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் உழவர் உற்பத்தியாளர் குழுவை சேர்ந்த விவசாயிகள், பரனூர் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.