கச்சிராயப்பாளையம் அருகே விவசாயியை கட்டிப்போட்டு 6 பவுன் நகை கொள்ளை: முகமூடி கும்பல் அட்டூழியம்


கச்சிராயப்பாளையம் அருகே விவசாயியை கட்டிப்போட்டு 6 பவுன் நகை கொள்ளை: முகமூடி கும்பல் அட்டூழியம்
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 1:45 PM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே விவசாயியை கட்டிப்போட்டு 6 பவுன் நகையை மூகமூடி கும்பல் கொள்ளையடித்துச்சென்றது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே எர்வாய்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல்(வயது 30). விவசாயி. இவரது மனைவி துர்கா(27). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு, காற்றுக்காக பின்பக்க கதவை திறந்து வைத்து தூங்கினர்.

நள்ளிரவு 1 மணியளவில் முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல், பின்பக்க வாசல் வழியாக மணிவேல் வீட்டுக்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு எழுந்த மணிவேல் கூச்சலிட முயன்றார். உடனே 3 கொள்ளையர்களும், அவரை தாக்கி கயிற்றால் கட்டிப்போட்டனர்.

6 பவுன் நகை கொள்ளை

பின்னர் அந்த கும்பல், துர்கா அணிந்திருந்த தாலி சங்கிலி மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என மொத்தம் 6 பவுன் நகையை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து மணிவேல் கச்சிராயப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்போில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளையர்கள் முகமூடி அணிந்து வந்திருந்ததால், அவர்களை மணிவேல் குடும்பத்தினர் சரியாக அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால் முகமூடி கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சவால் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரைக்கும் 13 இடங்களுக்கும் மேல் திருட்டு நடந்துள்ளது. இது பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. அதே நேரத்தில் திருட்டு தொடர்பாக இதுவரைக்கும் யாரும் கைது செய்யப்படவில்லை. இதற்கு கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல்களும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது, மாவட்டத்தில் பெரும்பகுதி கிராமப்புறங்கள் ஆகும். இங்கு கண்காணிப்பு கேமராக்கள் என்பது கிடையாது. எனவே கிராமப்புறங்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. எனவே கிராமங்களின் முக்கிய நகர சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதுடன், தொடர் திருட்டில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்திள்ளனர்.

1 More update

Next Story