தீக்குளிக்க முயன்ற விவசாயி கைது


தீக்குளிக்க முயன்ற விவசாயி கைது
x

தீக்குளிக்க முயன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

மண்எண்ணெயை ஊற்றி...

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்தது. இந்நிலையில் மதியம் அங்கு வந்த ஒருவர், கலெக்டரின் கார் அருகே நின்றுகொண்டு பொதுமக்களையும், அரசு ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றினார்.

இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் ஓடிச்சென்று அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பெற்றனர். அப்போது அவர் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கீழ வீதியை சேர்ந்த சரவணன்(வயது 52), விவசாயி என்பது தெரியவந்தது.

பட்டா மாற்ற முயற்சி

மேலும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 40 சென்ட் பூர்வீக விவசாய நிலத்தை கடந்த 18 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். சரவணனின் பூர்வீக நிலத்தின் அருகே உள்ள, அவரது சித்தப்பாவின் நிலத்தினை அந்த பெண் வாங்கி தன் பெயருக்கு பட்டா மாற்றியுள்ளார். மேலும் சரவணனின் பூர்வீக நிலத்தையும் அந்த பெண் தனது பெயரில் பட்டா மாற்றுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், அவருக்கு உடந்தையாக அரசுத்துறை அலுவலர்களும் இருந்து வருவதாக கூறி, சரவணன் தீக்குளிக்க முயன்றது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது

இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிலர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவங்கள் அரங்கேறின. நேற்றும் தீக்குளிப்பு முயற்சி சம்பவம் நடந்ததால் சரவணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார். இதையடுத்து பெரம்பலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) அகிலன் கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story