நகராட்சி, பேரூராட்சிகளில் வெளியாகும்கழிவுநீர் காவிரி ஆற்றில் கலப்புகுறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலப்பதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
ஈஸ்வரன் (திருச்செங்கோடு எம்.எல்.ஏ.,):- முதலில் குழுக்கூட்டம் நடத்த வேண்டும். அப்போது தான், விவசாயிகளின் பிரச்சினைக்கு 75 சதவீதம் தீர்வு காண முடியும். மீதம் உள்ள 25 சதவீதம் குறித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசலாம். ஆனால் இதுவரை குழுக்கூட்டம் நடத்தவில்லை. அதற்கான அழைப்பும் வரவில்லை.
கிராமசபை கூட்டத்தில் 100 நாள் வேலை ஆட்கள் தான் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்லசமுத்திரம் அருகே அத்தப்பம்பட்டி ஏரியில் இருந்து செல்லும் பாதையை அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, அந்த பாதை பழுதடைந்ததால், தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், 3 மாதமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
கலெக்டர் :- சம்பந்தப்பட்ட பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கழிவுநீர் கலப்பு
மெய்ஞானமூர்த்தி (விவசாயி) : பரமத்திவேலூரில் மட்டுமே கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் உள்ளது. வெண்ணந்தூர், முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர்கள் அங்கு வந்து செல்ல முடியாது. அதனால் திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
பாலசுப்ரமணியன் (விவசாயி) :-
நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில், நகராட்சி, பேரூராட்சி கழிவுநீர் கலக்கிறது. அதனால், விவசாயம் மேற்கொள்ள முடியவில்லை. கரையோரத்தில் தான், கூட்டு குடிநீர் திட்டமும் செயல்படுகிறது. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீரை கலக்கும் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்கப்படும்.
பெரியம்மை நோய் தாக்குதல்
சரவணன் (விவசாயி): நாமக்கல் மாவட்டத்தில் 35 சதவீதம் கன்றுகளை பெரியம்மை நோய் தாக்கி உள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையில் தடுப்பு மருந்துகள் இல்லாததால் பல கன்றுகள் இறந்து உள்ளன. கால்நடை பராமரிப்புத்துறையில், போதிய புள்ளி விபரங்கள் இல்லை.
இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா, வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார், தோட்டக்கலைத் துணை இயக்குனர் கணேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) பாஸ்கர் மற்றும் இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.