அறுவடை செய்த கேரட்டை கழுவ முடியாமல் விவசாயிகள் பாதிப்பு


அறுவடை செய்த கேரட்டை கழுவ முடியாமல் விவசாயிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2023 8:30 PM GMT (Updated: 12 Aug 2023 8:30 PM GMT)

கோத்தகிரி அருகே வேளாண் பல்நோக்கு மையம் மூடப்பட்டு உள்ளதால், அறுவடை செய்த கேரட்டுகளை கழுவ முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே வேளாண் பல்நோக்கு மையம் மூடப்பட்டு உள்ளதால், அறுவடை செய்த கேரட்டுகளை கழுவ முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நவீன எந்திரம்

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், வினியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 90 லட்சம் செலவில் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகில் முதன்மை பதப்படுத்தும் நிலையம், ரூ.4 கோடியில் கோத்தகிரி அருகே கஸ்தூரிபா நகர் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய வேளாண் பல்நோக்கு மையம் கட்டப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு விவசாயிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. வேளாண் பல்நோக்கு மையத்தில் காய்கறிகளை கழுவும் நவீன எந்திரம், காய்கறிகளை உலர்த்தும் எந்திரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த காய்கறிகளை வேளாண் பல்நோக்கு மையத்திற்கு கொண்டு சென்று கழுவி, இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விற்பனை செய்து வந்தனர். இந்த மையத்தை 3 ஆண்டு செயல்படுத்த ஒருவர் ரூ.6 லட்சம் வேளாண் வணிகத்துறைக்கு செலுத்த ஒப்பந்தம் போட்டிருந்ததாக தெரிகிறது.

வேளாண் பல்நோக்கு மையம் மூடல்

இதற்கிடையே வேளாண் பல்நோக்கு மையத்தில் காய்கறிகளை கழுவி தண்ணீரை சுத்தப்படுத்தி வெளியேற்ற எவ்வித வசதியும் செய்யப்படவில்லை. இந்த அழுக்கு தண்ணீர் தாழ்வான பகுதியில் செல்லும் ஆற்றில் நேரடியாக கலந்து கிராமங்களுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அழுக்கு தண்ணீரை ஆற்றில் விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மையத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயி கடந்த 3 மாதங்களாக வேளாண் வணிகத்துறைக்கு வாடகை செலுத்தாமல் பூட்டி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கைகாட்டி, சுள்ளிக்கூடு, நெடுகுளா, குருக்குத்தி, காவிலோரை மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த கேரட் உள்ளிட்ட காய்கறிகளை கழுவுவதற்கு பல கி.மீ. தொலைவில் உள்ள உயிலட்டி கிராமத்திற்கு சரக்கு வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.

திறக்க வேண்டும்

அங்கு தனியார் காய்கறி கழுவும் மையங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி கழுவி, விற்பனைக்கு சமவெளிப் பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, மூலதன செலவு அதிகரித்து வருகிறது. எனவே, கஸ்தூரிபா நகர் பகுதியில் உள்ள வேளாண் பல்நோக்கு மையத்தை மீண்டும் திறக்கவும், காய்கறி கழுவும் தண்ணீர் பல கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆற்று நீரில் கலக்காமலும் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story