அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு; கரூரை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி


அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு; கரூரை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
x

அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூரை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர்

கேரளா மாநிலம் மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 12-ந் தேதி அணைக்கு 3,181 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில் கடந்த 13-ந் தேதி 2,198 கன அடியாகவும் இருந்தது. இதனை அடுத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 4,328 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் அணையின் நீர்மட்ட உயரம் 90 அடியாக உள்ள நிலையில் தற்போது அணையில் 78.91 அடியாக தண்ணீர் உள்ளது. நேற்றய நிலவரப்படி 1,000 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி சீரி பாய்ந்து கரூர் நகரத்தை கடந்து சென்றது. இதனால் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் கரூர் அருகே உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மாயனூர் கதவனுக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி 14,244 கன அடி நீர் வந்து கொண்டு இருந்த நிலையில் காவிரி ஆற்றில் 13,622 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கிணறுகளின் நீர்மட்டும் உயரும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story