தொடர்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி
வத்திராயிருப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தொடர்மழை
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பொருத்தவரை கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாலையில் மழை பெய்து வருகிறது. வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், கோபாலபுரம், சுந்தரபாண்டியம், கோட்டையூர், இலந்தைகுளம், பிளவக்கல் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் சாலையில் கழிவு நீருடன், மழைநீரும் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடியது. தொடர்மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தற்போது முதல் போக நெல் நடவிற்காக வயல்களை தயார் படுத்தி வரும் நிலையில் தொடர்ச்சியாக பெய்யும் மழையால் விவசாயம் நன்றாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.