கனகாம்பரம் பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


கனகாம்பரம் பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:46 PM GMT)

விழுப்புரம் பகுதிகளில் கனகாம்பரம் பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விழுப்புரம்

சந்தையில் நிலையான விலை உடைய வாசமில்லா மலர் கனகாம்பரம். மணம் இல்லை என்றாலும் எப்போதும் பணம் கொடுக்கும் மலராகும். இத்தகைய கனகாம்பரம் செடிகளை விழுப்புரம் அருகே ராதாபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மதுரப்பாக்கம், திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்துள்ளனர்.

மழைக்காலம் தவிர்த்து ஆண்டு முழுவதும் பூக்களை கொடுக்கும் இந்த செடி, விவசாயிகளின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கிறது. ஏக்கர் கணக்கில் பிற மலர்களை நட்டாலும் தங்கள் நிலத்தில் குறைந்த செண்ட் கணக்கிலாவது இடம்ஒதுக்கி கனகாம்பரம் செடியை நடுவதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். அவை தற்போது செடிகளில் பூக்களாக பூத்துக்குலுங்கி பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

அதிக வரவேற்பு

கனகாம்பரத்தில் சிவப்பு, மஞ்சள், டெல்லி கனகாம்பரம், பச்சை கனகாம்பரம் ஆகிய ரகங்கள் இருந்தாலும் சிவப்பு வண்ணத்தில் உள்ள மலர்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும் செம்மண் உள்ள நிலங்களில் ஆவணி மாதத்தில் இருந்து தை மாதம் வரை கனகாம்பரம் பூ சாகுபடி செய்து வருகிறோம். செடிகளை நட்டு ஒரு மாதம் கழித்து பூக்கள் பூக்க தொடங்கி விடும். இதில் நன்றாக மலர்ந்த மலர்களை 2 நாட்களுக்கு ஒருமுறை பறித்துவர வேண்டும். மற்ற மலர்களில் சாகுபடி இல்லாத நேரத்தில்கூட, இந்த செடியில் மலர்களை சாகுபடி செய்து அதன் மூலம் வீட்டு செலவுகளையாவது சரிகட்டலாம்.

நல்ல விலைபோகும்

இங்கு பறிக்கப்படும் கனகாம்பரம் பூக்கள், திண்டிவனம், புதுச்சேரி போன்ற இடங்களில் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. நாள்தோறும் குறைந்தபட்சம் 5 கிலோ வரை பூக்களை பறித்து சந்தைகளுக்கு அனுப்புகிறோம். தற்போது வருகிற நாட்களில் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகள் இருப்பதால் கனகாம்பரம் மலர்கள் நல்ல விலைபோகும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story