விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்


விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2023 3:30 AM IST (Updated: 27 Sept 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.33.75 வழங்கக்கோரி கூடலூரில் சிறு தேயிலை விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூர்

பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.33.75 வழங்கக்கோரி கூடலூரில் சிறு தேயிலை விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிலோவுக்கு ரூ.33.75 வழங்க கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. ஆனால் பச்சை தேயிலை விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பசுந்தேயிலை விலை நாளுக்கு நாள் சரிந்து வருவதால் தேயிலை தோட்டங்களை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதனால் பச்சை தேயிலைக்கு போதிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாண் துறை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின் அடிப்படையிலும், ஐகோர்ட்டு உத்தரவின்படியும் பசுந்தேயிலை கிலோ ரூ.33.75-க்கு விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். நிலப்பட்டா இல்லாத விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும்.

உண்ணாவிரத போராட்டம்

தேயிலை ஏல மையங்களில் அடிப்படை ஆதார தொடக்க விலையாக கிலோ ரூ.150 நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் காந்தி திடலில் சிறு தேயிலை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இதற்கு கூட்டமைப்பு தலைவர் ஷாஜி தலைமை தாங்கினார். சாலீஸ்வரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் நல சங்க தலைவர் கணபதி முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்தை கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தொடங்கி வைத்து பேசினார்.

போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சிறு தேயிலை விவசாயிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு போராட்டம் முடிவடைந்தது.


Next Story