விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
அன்னூர்,
அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
சிப்காட் அமைக்க எதிர்ப்பு
கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவில் பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், வடக்கலூர், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர் ஆகிய 6 ஊராட்சிகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில், சிப்காட் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கு அன்னூர் விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னூர் தாலுகா அலுவலகம் முன்பு நமது நிலம் நமதே போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அன்னூரில் சிப்காட் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடும் வரை தொடர் போராட்டம் நடத்த போராட்டக்குழு தலைவர் ரவிக்குமார் மற்றும் விவசாயிகள் முடிவு செய்தனர்.
உண்ணாவிரத போராட்டம்
இந்தநிலையில் நேற்று சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் அன்னூர் ஓதிமலை சாலையில் உள்ள திடலில் நடைபெற்றது. அத்துடன் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். இந்த போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது.
போராட்ட மேடையில் வாழைத்தார் உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் வைத்திருந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, அன்னூரில் சிப்காட் அமைக்க 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றனர். போராட்டத்தில் தமிழக விவசாய சங்க தலைவர் வேணுகோபால், போராட்டக்குழு தலைவர் ரவிக்குமார், செயலாளர் ராஜா உள்பட 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வந்து ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அமுல் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் சாய் செந்தில் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். இதேபோல் பா.ஜ.க. சார்பில் மாநில நிர்வாகி நாகராஜ், கோவை வடக்கு மாவட்ட செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ஜெயபால் தலைமையில் நிர்வாகிகள் சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் வருகிற 7-ந் தேதி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.