நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை


நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
x

மங்களமேடு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கின. இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

பலத்த காற்றுடன் கனமழை

கோடைகாலத்தில் வழக்கமான அளவை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மங்களமேடு பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கின. மேலும் நெற்பயிர்கள் நன்கு முதிர்ச்சி அடைந்துள்ளதால் தேங்கி நிற்கும் மழைநீரில் சாய்ந்து முளைக்கத்தொடங்கியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நெற்பயிர்கள் சாய்ந்தன

மேலும் விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தாமதமாகிக்கொண்டே வருகிறது. மழை பெய்யும்போது நாங்கள் நெற்பயிர்களை அறுவடை செய்தால் வைக்கோல் மழையில் நனைந்து வீணாகிவிடும் என்பதாலும், வெயில் அடிக்கும்போது அறுவடை செய்தால் எங்களின் கால்நடைகளுக்கு வைக்கோலை உணவாக அளிக்கலாம் என்றும் நினைத்திருந்தோம். ஆனால் தற்போது பெய்த மழையில் நெற்பயிர்கள் சாய்ந்து முளைக்க தொடங்கிவிட்டன. இதனால் எங்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை எந்திரத்தின் மூலம் அறுவடை செய்வது என்பது கொஞ்சம் சிரமம். அப்படி அறுவடை செய்தால் நேர விரயம் ஏற்பட்டு எந்திரத்திற்கான வாடகை செலவு அதிகரிக்க நேரிடும்.

நஷ்டஈடு வழங்க கோரிக்கை

மேலும் இப்பகுதியில் அறுவடை செய்தவர்களும் வைக்கோலை தங்களின் வயல்களில் குவியலாக வைத்து இருந்தனர். அதுவும் தற்போது வீணாகிவிட்டது. தொடர் மழையின் காரணமாக மங்களமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் நெல் மூட்டைகளை வயல் பகுதியிலேயே வைத்து மூடி பாதுகாத்து வருகிறோம். இன்று (அதாவது நேற்று) வானம் மேகமூட்டத்துடனே காணப்படுவதால் அறுவடை பணியை மேற்கொள்ளாமல் உள்ளோம். இதே நிலை நீடித்தால் நெற்பயிர்கள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்படும். கடன் வாங்கி பயிரிட்டுள்ளோம். தற்போது பெய்த மழை எங்களுக்கு பெரும் அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து எங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த ஒரு மாதமாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் விவசாயிகள் லேசான மழையை எதிர்பார்த்தனர். ஆனால் விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரே நாள் இரவில் அதிக மழை கொட்டி தீர்த்தது. இதனால் வறண்டு போய் கிடந்த பாசன வாய்க்கால்களில் மழைக்காலம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.


Next Story