மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிடாவிட்டால்கர்நாடக துணை முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிடுவோம்விவசாய முன்னேற்ற கழகம் அறிவிப்பு


மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிடாவிட்டால்கர்நாடக துணை முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிடுவோம்விவசாய முன்னேற்ற கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2023 12:30 AM IST (Updated: 1 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கைவிடாவிட்டால், அந்த மாநில துணை முதல்-மந்திரி வீட்டின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விவசாய முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.

மேகதாதுவில் அணை

விவசாய முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் செல்ல.ராசாமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்து, தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும் தமிழகத்தில் காவிரி ஆற்றை நம்பி உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும். அதனால் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

மத்திய அரசும், பசுமை தீர்ப்பாயமும் மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை முதல்-மந்திரியும், நீர்பாசனத்துறை மந்திரியுமான சிவக்குமார், நீர்வளத்துறை அதிகாரிகளை அழைத்து காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உடனடியாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளார்.

கண்டனத்துக்குரியது

இந்த உத்தரவு தமிழர்கள் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர். விவசாயம் பாதிக்கப்படும் என்பதால், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இருக்கிற நல்லுறவும், சட்டம், ஒழுங்கு பாதிக்கின்ற வகையில் அந்த மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமார் அறிவித்ததுடன், உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

முற்றுகை போராட்டம்

உடனடியாக மேகதாது அணை குறித்து வெளியிட்ட அறிக்கையை நீர்வளத்துறை மந்திரி திரும்ப பெற வேண்டும். தமிழக முதல்-அமைச்சரும், தமிழக நீர்பாசனத்துறை அமைச்சரும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலன்கருதி மத்திய அரசுடன் பேசி, மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும்.

தவறும்பட்சத்தில் தமிழக விவசாயிகளின் உணர்வுகளை கர்நாடகா, தமிழகம் மற்றும் மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் கர்நாடக மாநில நீர்பாசனத்துறை மந்திரி சிவக்குமார் வீட்டை, தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் ராமசாமி மற்றும் மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story