விழுப்புரத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை படுகொலை செய்த மத்திய மந்திரி அஜய்மிஸ்ராடேனியை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனையை வழங்க வேண்டும், பிரதமர் மோடி உறுதியளித்தபடி குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நாடு தழுவிய அளவில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், விவசாய விடுதலை முன்னணி நிர்வாகி அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தாண்டவராயன், மாவட்ட தலைவர் சகாபுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கண்டன கோஷம்
இதில் நிர்வாகிகள் இளங்கோ, அம்பேத்கர், அல்லிமுத்து, கிருஷ்ணன், சேகர், ஞானசேகரன், குமாரசாமி, சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் மூர்த்தி, முத்துக்குமரன் உள்பட பலர் கலந்துகொண்டு கருப்புக்கொடி ஏந்தியவாறு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.