வியாபாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்


வியாபாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
x

நெல்மூட்டைகளுக்கு விலை நிர்ணயம் செய்யாத வியாபாரிகளை கண்டித்து அவலூர்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு நேற்று காலை விற்பனைக்காக விவசாயிகள் வாகனங்கள் மூலம் நெல் உள்ளிட்ட தானிய மூட்டைகளை கொண்டு வந்தனர். ஆனால் பகல் 12 மணி ஆகியும். நெல் மூட்டைகளுக்கு வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மற்றும் தானிய மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள், விலை நிர்ணயம் செய்யாத வியாபாரிகளை கண்டித்து அங்குள்ள சேத்துப்பட்டு-கீழ்பெண்ணத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கூறுகையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வரை சாதாரண தராசு மூலம் தானிய மூட்டைகள் எடைபோடப்பட்டன.

இதில் சில நேரங்களில் முறைகேடுகள் நடந்து வந்தது. இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) முதல் டிஜிட்டல் தராசில் எடைபோட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் தராசால் சரியான எடையை காண்பிக்கமுடியும்.

நடவடிக்கை

இதனால் அவர்களால் எங்களுடைய விளைபொருளை அதிகமாக எடுக்க முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாகத்தான் டிஜிட்டல் தராசு மூலம் எடை போடுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, நெல் மூட்டை மற்றும் தானிய மூட்டைகளுக்கு விலை நிர்ணயம் செய்யவில்லை. எனவே டிஜிட்டல் தராசு மூலம் எங்களுடைய நெல், தானிய மூட்டைகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story