அங்ககச்சான்று பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அங்ககச்சான்று பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம்,
தற்போது அதிகளவில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலில் இயற்கை எதிரிகளான சிலந்தி, தட்டான், குளவி போன்றவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. ரசாயன உரங்களினாலும், பூச்சி மருந்துகளாலும் உணவு சங்கிலி நஞ்சாக்கப்பட்டு அதிகளவில் சேமிக்கப்பட்டு பலவகையான புற்றுநோய், மண்ணின் வளம் குன்றுதல், சிறுபான்மை பூச்சிகள் பெரும்பான்மை பூச்சிகளாக மாறுதல் போன்ற பாதகங்கள் ஏற்படுகின்றது.
எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிர்கால சந்ததியை காக்க விவசாயிகள் நீடித்த நிலையான இயற்கை விவசாயத்திற்கு மாறுவது காலத்தின் அவசியமாகும். இயற்கை விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்பது முற்றிலும் செயற்கை இடுபொருட்களான உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை தவிர்த்து இயற்கை எரு, பசுந்தாள் உரங்கள், மண்புழு உரம், பஞ்ச கவ்யம், வேம்பு தாவரங்கள் சார்ந்த இடுபொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு தற்சார்பு முறையாகும். விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இயற்ைக வழி விவசாயத்தில் விதை முதல் உற்பத்தி, அறுவடை, விளைபொருட்கள் விற்பனை வரை அனைத்து நிலைகளிலும் கடைபிடிக்க வேண்டிய சில தர நிர்ணயங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அங்ககச்சான்று பெறலாம்
தமிழகத்தில் இயற்கை விளைபொருட்கள் உற்பத்தி செய்தல், பதனிடுதல் மற்றும் விற்பனைக்கு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை திட்டத்தின்படி அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் அங்ககச்சான்று எனப்படும் இயற்கை வேளாண் சான்று வழங்கப்பட்டு வருகிறது. அங்ககச்சான்று பெற தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்யலாம். மேலும் வனபொருட்களை சேகரிப்பு செய்பவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். பெருவணிக நிறுவனங்களும் அங்கக பொருட்களை பதப்படுத்துவோர் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். தனி நபர் சிறு, குறு விவசாயிகள் எனில் ரூ.2700-ம், தனிநபர் பிற விவசாயிகள் எனில் ரூ.3200-ம், குழுப்பதிவு எனில் ரூ.7200-ம், வணிக நிறுவனம் எனில் ரூ.9400-ம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
அங்கக சான்றிதழ் பெற விண்ணப்ப படிவம் பண்ணையின் பொது விவர குறிப்புகள், பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம் மூன்று நகல்கள், நில ஆவணம், வருமான வரி கணக்கு எண் அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் மற்றும் உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட அங்ககச்சான்று ஆய்வாளர்கள், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.