நம்மாழ்வார் விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


நம்மாழ்வார் விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நம்மாழ்வார் விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

நாட்டு மக்களின் உடல் நலத்தை காக்கவும், மண்வளம், இயற்கை வளத்தை காக்கவும், நீடித்த நிலையான வேளாண்மையை ஊக்கப்படுத்தவும், அங்கக வேளாண்மை கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி அங்கக வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சி கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் சாகுபடி செய்து மண் வளத்தை பாதுகாப்பதாகும். அங்கக வேளாண்மையில், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், அங்கக கழிவுகளை நன்றாக மட்கச்செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணுக்கு அளித்து பயிர்கள் வளர உதவுகின்றன. நுண்ணுயிர்கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால் மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதால், நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்த (2023-2024) -ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி சக விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது. எனவே நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வருகிற 30-11-2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100. குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். முழு நேர அங்கக விவசாயியாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை குடியரசு தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். இதில் முதல் பரிசு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும். நம்மாழ்வார் விருதுக்கான விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story