குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
மாற்றுப்பயிர்கள்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் 2023 - 2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர்களான சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் நோக்கமானது குறுவை, கார், சொர்ணவாரி பருவத்தில் நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர் மற்றும் இடுபொருள் தேவையுள்ள சிறுதானியங்கள், பயறுவகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடியை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து மிகு உணவு தானிய உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் குறுகிய கால பயிர்களை பயிரிடுவதன் மூலம் பயிர் சாகுபடி திறனை அதிகரித்தல் ஆகும்.
50 சதவீதம் மானியம்
சிறுதானியங்கள் சாகுபடி மேற்கொள்வதற்கு தேவையான இடுபொருட்களான விதைகள், சூடோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி மற்றும் மண்ணில் இடுவதற்கான செலவினம், திரவ உயிர் உரங்களான சோஸ்பைரில்லம் போன்றவற்றுக்காக விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
பயறுவகை சாகுபடி மேற்கொள்வதற்கு தேவையான இடுபொருட்களான விதைகள், சூடோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி மற்றும் மண்ணில் இடுவதற்கான செலவினம், திரவ உயிர் உரங்களான ரைசோபியம் (பயறு) மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றுக்காக விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. எண்ணெய் வித்து சாகுபடி மேற்கொள்வதற்கு விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
உழவன் செயலியில்
தற்போது அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் பயறுவகை உளுந்து விதை ரகங்கள் வம்பன் 6, வம்பன் 8, வம்பன் 11, பச்சைப்பயறு விதை கோ 7, கோ 8 ரகங்கள், மணிலா விதை டி.எம்.வி. 13, டி.எம்.வி. 14, கே 1812 மற்றும் கேழ்வரகு விதை ரகம் பையூர் 2 இருப்பில் உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாமிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்தும், தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.