பொள்ளாச்சியில் 27-ந் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


பொள்ளாச்சியில் 27-ந் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
x

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி பாலாறு படுகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

நெகமம்,

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி பாலாறு படுகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு ஆழியாறில் இருந்து தண்ணீரை கொண்டு சென்று ரூ.930 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக டெண்டரும் விடப்பட்டதாக தெரிகிறது. இந்த திட்டத்திற்கு கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் ஆழியாறு படுகை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் பாலாறு படுகை விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நெகமத்தில் நேற்று நடத்தினார்கள். இதற்கு திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாசன சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தீக்குளிக்கவும் தயார்

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-

ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏற்கனவே அங்கு 4 குடிநீர் திட்டங்கள் இருக்கும் போது தண்ணீர் பற்றாக்குறை உள்ள பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து ஏன் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். பி.ஏ.பி. திட்டத்தில் ஆண்டுதோறும் நீர்பங்கீடு செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே. ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டங்களை நடத்தலாம். இதற்காக ஒரு குழு அமைத்து அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை திரட்டி ஆதரவு கேட்கலாம். மேலும் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டமும் நடத்தலாம். இதையும் மீறி திட்டத்தை நிறைவேற்ற நினைத்தால் விவசாயிகள் தீக்குளிக்கவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஒப்பந்தத்தில் சிக்கல்

திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறியதாவது:-

ஒட்டன்சத்திரத்தில் காவேரியில் இருந்து ரூ.150 கோடி செலவில் ஏற்கனவே இரு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதை தவிர பாலாறு, பொருந்தலாறு, பரப்பலாறு ஆகிய நீர் ஆதாரங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டங்களை முடக்கி விட்டு, ரூ.930 கோடியில் புதிதாக திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். ஆழியாறு அணையில் இருந்து ஒப்பந்தப்படி பழைய ஆயக்கட்டு, கேரளாவுக்கு தண்ணீர் வழங்குவதில் பற்றாக்குறை உள்ளது.

ஆழியாறு, திருமூர்த்தி அணைகள் மூலம் ஒரு ஆண்டுக்கு குடிநீர் தேவைக்கு மட்டும் 4½ டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. காவேரியில் வரும் தண்ணீர் மூலம் ஒட்டன்சத்திரத்திற்கு திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. ஆழியாறில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வது தமிழக-கேரள ஒப்பந்தத்திற்கு புறம்பான நடவடிக்கையாகும். இதனால் பி.ஏ.பி. ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்படும்.

27-ந் தேதி ஆர்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி காலை 10 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சம் விவசாயிகள் கலந்துகொள்வார்கள். மேலும் ஆர்ப்பாட்டம் முடியும் வரை கடைகளை அடைப்பது குறித்து தொழில் வர்த்தக சபை, வியாபாரிகள் சங்கத்தினருடன் கலந்து ஆலோசிக்கப்படும். இந்த திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்யும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story