குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம்


குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம்
x

குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே 27-ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று ஏற்கனவே கலெக்டர் அறிவித்திருந்தார். ஆனால் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் கடந்த 25-ந்தேதி தொடங்கிய ஜமாபந்தி நேற்று வரை நடைபெற்றதால், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக கலெக்டர் நேற்று முன்தினம் மதியம் அறிவித்தார். அந்த தகவல் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு சென்றடைந்தது. ஆனால் சாதாரண விவசாயிகளுக்கு சென்றடையவில்லை.

இதனால் அந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று எண்ணி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை முதலே வரத் தொடங்கினர். கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அறிவிப்பு பலகையில் ஜமாபந்தி காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட விவசாயிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். கலெக்டர் அலுவலகத்தில் கூடிய விவசாயிகளை போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இது பற்றி விவசாயிகள் கூறுகையில், மாதத்தில் ஒரு நாள் தான் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. அன்றுதான் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க முடியும். ஜமாபந்தியை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமையில் முடித்திருக்கலாம். எனவே ரத்து செய்யப்பட்ட இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை வருகிற 31-ந்தேதி நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Next Story