எள் சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்


எள் சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நெல் பயிர்கள் கைவிட்டாலும், எள் பயிர் கைவிடாது என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் எள் பயிரிட்டுள்எனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நெல் பயிர்கள் கைவிட்டாலும், எள் பயிர் கைவிடாது என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் எள் பயிரிட்டுள்எனர்.

வடகிழக்கு பருவமழை பொய்த்தது

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை மழை ஓரளவு பெய்ததால் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் ஆரம்ப மழை நன்றாக பெய்தது.

ஓரிரு நாட்கள் அடைமழையாக பெய்த வடகிழக்கு பருவமழை அதன் பின்பு மழை பெய்யாமல் மண்ணை மட்டும் நனைத்து விட்டு அதோடு போதும் என்று சொல்லும் வகையில் நின்று விட்டது. டிசம்பர் மாதம் இறுதியில் மழை பெய்யும் என எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் நெற்பயிர்கள் கருகி விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

எள் சாகுபடி

வைகை பாசன கண்மாய் பகுதிகளில் மட்டும் ஓரளவு நெல் விவசாயம் கை கொடுப்பதாக அமைந்துள்ளது. மழையை நம்பி ஏமாந்த நெல் விவசாயிகள் தற்போது நெல்லுக்கு மாற்றாக வேறு பயிர்களை பயிரிடத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக ராமநாதபுரம் அருகே நயினார்கோவில், காவனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் மாற்று பயிர்களை பயிரிட தொடங்கியுள்ளனர். குறிப்பாக எள் பயிரிட்டு வருகின்றனர். ராமநாதபுரம் அருகே எள் பயிரிட்ட பகுதிகளில் எள் செடிகள் நன்றாக வளர்ந்து பூக்க தொடங்கியுள்ளன.

ஆலோசனை

பொதுவாக எள் பயிருக்கு விதைப்பு சமயத்தில் ஒரு மழையும், வளரும் சமயத்தில் ஒரு மழையும் இருந்தாலே போதும். எள் நன்றாக வளர்ந்து விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு எள் விவசாயம் அதிகளவில் போடப்பட்டுள்ளதால் தற்போது நன்கு வளர்ந்து பூத்து குலுங்குகின்றன.

இந்த எள் பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவுரைகளையும் மருந்து முறை ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் கடும் பனிப்பொழிவு உள்ளதால் எள் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான பயிர் பாதுகாப்பு ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். நெல் கைவிட்ட நிலையில் எள் கைவிடாது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


Next Story