அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை விவசாயிகள் பெருக்கிக்கொள்ள வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை


அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி  வேளாண் உற்பத்தியை விவசாயிகள் பெருக்கிக்கொள்ள வேண்டும்  மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை
x

அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை விவசாயிகள் பெருக்கிக்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா அறிவுறுத்தினார்.

சேலம்

சேலம்,

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா பேசியதாவது:-

விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிற அனைத்து திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1112.60 மி.மீ மழை

சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.90 மி.மீ ஆகும். இயல்பாக நவம்பர் மாதம் முடிய பெய்ய வேண்டிய அளவு 942.10 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு 15.11.2022 வரை 1112.60 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை காட்டிலும் நடப்பாண்டில் கூடுதலாக மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அக்டோபர் மாதம் வரை 1,74,890 எக்டர் பரப்பில் நெல், சோளம், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள், வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மைத்துறையால் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் 240 டன் நெல், சிறு தானியங்கள் 96 டன், பயறு வகைகள் 428 டன், எண்ணெய் வித்துக்கள் 307 டன் மற்றும் பருத்தி 2 டன் ஆகியவை வினியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தேவையான அளவிலான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பயிர் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி குறித்தும், மரவள்ளி, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி மற்றும் மகசூல் விவரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

விழிப்புணர்வு முகாம்கள்

குறிப்பாக, தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் குறித்தும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்குவது குறித்தும், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் தொடர்பாகவும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

வேளாண்மைத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொண்டு, வேளாண் உற்பத்தியை பெருக்கிக்கொள்வதோடு, அதிக வருவாய் ஈட்டி தங்களின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் புருசோத்தமன், துணை இயக்குனர் (வேளாண்மை - மாநிலத் திட்டம்) சீனிவாசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கண்ணன் உள்பட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story