பழைய கால்வாய்கள் வழியாக நிறைவேற்ற வேண்டும்: காவிரி- சரபங்கா உபரிநீர் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த கூடாது குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டத்தை ஏற்கனவே உள்ள கால்வாய்கள் வழியாக நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
சேலம்,
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சேலம் செந்தராப்பட்டியை சேர்ந்த விவசாயி செந்தில் உள்பட விவசாயிகள் பேசும் போது, மண்மாரி ஊராட்சி பகுதிகளில் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கவும், கல்குவாரி அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பூச்சி கொல்லி மருந்து, கல்குவாரி அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர்.
காவிரி- சரபங்கா திட்டம்
வாழப்பாடியை சேர்ந்த பாலச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகள், வாழப்பாடி பகுதியில் விவசாய நிலத்தின் நடுவில் ஏராளமான உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை மேலும் இழப்பீடு தொகை குறைந்த அளவு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. எனவே முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றனர்.
அதேபோன்று மேட்டூரை சேர்ந்த செல்வராஜ் உள்ளிட்ட விவசாயிகள், காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டத்தை ஏற்கனவே உள்ள கால்வாய்கள் வழியாக செயல்படுத்த வேண்டும். இதற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர். இதே போன்று ஏராளமான விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள்வைத்தனர்.
பல்வேறு நடவடிக்கை
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசும் போது, அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறதுஎன்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ரவிக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் புருஷோத்தமன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.