பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை ; சிதம்பரத்தில் பரபரப்பு


பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை ; சிதம்பரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து சிதம்பரம் வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

அண்ணாமலைநகர்,

மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிப்பு

சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம் வல்லம்படுகை, தெற்கு மாங்குடி, வடக்குமாங்குடி, சிவபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசு ஏக்கருக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கியது. ஆனால் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலமுறை மனுக்கள் அளித்தும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

வேளாண் அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் வல்லம்படுகை விவசாயிகள் கூட்டமைப்பினர் நேற்று காலை சிதம்பரம் அம்மாபேட்டையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் காப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்காத வேளாண் அதிகாரிகளை கண்டித்து வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் வசந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் சேதுமாதவன், விவசாய சங்க நிர்வாகிகள் அழகரசன், சந்திரசேகர், மதியழகன், தட்சிணாமூர்த்தி, செல்வகுமார், செந்தில், சுப்பிரமணியன், அருள், சிவகுமார் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை உடனே வழங்கக் கோரி கண்டன கோஷம் எழுப்பிச் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story