அம்பை தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


அம்பை தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x

அம்பை தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

அம்பை:

மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளை நம்பி உள்ள அம்பை தாலுகாவை சார்ந்த விவசாயிகளின் பலகட்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி பாசனத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் 105 நாட்கள் தண்ணீர் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை நம்பி இப்பகுதி விவசாயிகள் விவசாய பணிகளை முன்னெடுத்து செய்துள்ளனர்.

இந்த நிலையில் அணையில் இருக்கும் நீரின் அளவைப் பொறுத்து குடிநீருக்கு மட்டும்தான் கொடுக்க முடியும், பாசனத்திற்கு கொடுக்க முடியாத சூழல் உள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்து கால்வாய்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே விவசாய முன்னெடுப்பு பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள் நேற்று அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பொதுப்பணித்துறை என்ஜினீயர் பேச்சிமுத்து, தாசில்தார் சுமதி, துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விவசாயிகளின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துக்கூறி 2 நாட்களில் நல்ல முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜய பாலாஜி, நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story