கீழ்பவானி வாய்க்காலை சீரமைத்து ஆயகட்டு பாசனதாரர்களுக்கு சமச்சீரான தண்ணீர் வழங்க வேண்டும்- சிவகிரியில் நடந்த மாநாட்டில் கோரிக்கை


கீழ்பவானி வாய்க்காலை சீரமைத்து ஆயகட்டு பாசனதாரர்களுக்கு சமச்சீரான தண்ணீர் வழங்க வேண்டும் என்று சிவகிரியில் நடந்த மாநாட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு

சிவகிரி

கீழ்பவானி வாய்க்காலை சீரமைத்து ஆயகட்டு பாசனதாரர்களுக்கு சமச்சீரான தண்ணீர் வழங்க வேண்டும் என்று சிவகிரியில் நடந்த மாநாட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமச்சீரான தண்ணீர்

கீழ்பவானி ஆயகட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு சிவகிரியில் நேற்று காலை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* கீழ்பவானி கால்வாயை சீரமைத்து அனைத்து ஆயகட்டு பாசனக்காரர்களுக்கும் சமச்சீரான தண்ணீர் வழங்க வேண்டும்.

* நகரமயமாதல் காரணமாக பாசனம் பெறாத சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஆயகட்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

* 34 கசிவு நீர் திட்டத்தின் கீழ் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கீழ்பவானி ஆயகட்டில் இணைக்க வேண்டும்.

பாசனங்கள் தடை

* கீழ்பவானி ஆயகட்டில் இல்லாத முறைகேடான நீரேற்று பாசனங்களை உடனே தடை செய்ய வேண்டும்.

* "தாராபுரம் கட்" என்ற பெயரில் நீக்கம் செய்துள்ள 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கீழ்பவானி ஆயகட்டு பாசனத்தில் இணைக்க வேண்டும்,

போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கீழ்பவானி ஆயகட்டு பாசனதாரர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னையன் ஆகியோர் மாநாட்டின் கொள்கைகளை விளக்கிப் பேசினார்கள். மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் சுப்பு, கீழ்பவானி ஆயகட்டு பாசனதாரர்கள் சங்கத்தின் பொருளாளர் சண்முகராஜ் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு துணைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். முடிவில் எல்.5 பாசன சபை செயலாளர் செங்கோட்டு வேலுமணி நன்றி கூறினார்.


Next Story