2-ம் போக சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டம்


2-ம் போக சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-11T00:15:48+05:30)

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 5 அடி தண்ணீர் உள்ளதால் அதனை பயன்படுத்தி 2-ம் போக சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 5 அடி தண்ணீர் உள்ளதால் அதனை பயன்படுத்தி 2-ம் போக சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

நெற்பயிர் கருகின

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியதோடு இயல்பான மழை அளவினை விட குறைவாகவே பெய்தது. பெய்த கனமழையும் பயனின்றி கடல்பகுதியில்தான் பெய்தது. இதனால் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்த்து சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் எக்டரில் நெல் விவசாயம் செய்த விவசாயிகள் மழையில்லாமல் போனதால் கடும் ஏமாற்றமடைந்தனர்.

இதனால் பல பகுதிகளில் பயிர்கள் கருகி விட்டன. நெல்மணிகள் வரும்முன்னரே பயிர்கள் கருகியதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நெல் கைவிட்டதால் அதனை நம்பி பயனில்லை என்று பல பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிர்களை அறுத்துவிட்டு மீண்டும் உழுது பருத்தி உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர். மாவட்டத்தில் வைகை தண்ணீர் பாயாத பகுதிகளில்தான் இந்த நிலை உள்ளது.

ஆனால், வைகை தண்ணீர்பாயும் பகுதிகளில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பருவமழைக்கு முன்னதாகவே வைகை தண்ணீர் வந்து நீர்நிலைகளை நிரப்பியதாலும், வைகை உபரிநீர் வந்ததாலும், மழை ஓரளவு பெய்ததாலும் நீர்நிலைகள் நிரம்பி விவசாயத்திற்கு கைகொடுத்தது.

2-ம் போக சாகுபடி

இதுகுறித்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் பாசன மூத்த விவசாயி சாத்தையா கூறியதாவது:-

பெரிய கண்மாயில் இந்த ஆண்டு 7 அடியை நெருங்கி தண்ணீர் நிரம்பியதால் முதல்போக விவசாயத்திற்கு தண்ணீர் முழுமையாக கிடைத்தது. இதன்மூலம் நன்றாக பயிர்கள் வளர்ந்து அறுவடை பணிகளை தொடங்கி உள்ளோம். தற்போது வரை விவசாயத்திற்கு தண்ணீர் எடுத்தது போக 4 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.

இந்த தண்ணீரை பயன்படுத்தி இந்த ஆண்டு 2-ம் போக சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தற்போது 5 அடி தண்ணீர் உள்ளது. கடந்த பல மாதங்களாக பெரிய கண்மாயில் 5 அடி இருப்பு வைத்து வருகிறோம். இந்த கண்மாயின் பாசன பரப்பு என்பது 3 ஆயிரத்து 962 ஏக்கர் ஆகும். இவை அனைத்தும் இந்த ஆண்டு தண்ணீர் முழுமையாக கிடைத்ததால் நன்றாக விளைந்துள்ளது. தற்போது உள்ள தண்ணீர் 2-ம் போகத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்த ஆண்டு சுமார் 1,800 ஏக்கருக்கு மேல் 2-ம் போக சாகுபடி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு மேல் சாகுபடி செய்தாலும் தண்ணீர் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story