பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் வேப்பூர் அருகே பரபரப்பு


பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்காத    அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்    வேப்பூர் அருகே பரபரப்பு
x

வேப்பூர் அருகே பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


ராமநத்தம்,

மின்மாற்றி பழுது

வேப்பூர் அருகே ப.கொத்தனூர் கிராமத்தில் உள்ள மின்மாற்றி மூலம் சுமார் 200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்த மின்மாற்றி கடந்த 1½ மாதத்துக்கு முன்பு திடீரென பழுதடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி விவசாயிகள் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து தடையின்றி மின்வினியோகம் செய்ய கோரி மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து பழுதடைந்த மின்மாற்றியை சீரமைப்பதற்காக கழற்றிச் சென்றனர். ஆனால் இதுவரை மின்மாற்றியை சீரமைத்து மின்வினியோகம் செய்யவில்லை.

ஆர்ப்பாட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம விவசாயிகள் மின்மாற்றி அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மின்மாற்றியை கழற்றிச் சென்று 1½ மாதம் ஆகியும் சீரமைக்காத மின்வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அக்கிராம விவசாயிகள் கூறுகையில், பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்யக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் பயிர்கள் அனைத்தும் கருகும் நிலை உருவாகி உள்ளது. ஆகவே பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைத்து மின்வினியோகம் செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். அதன்பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து தாமாகவே கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story