எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்திற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: குருபரப்பள்ளியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்திற்கு விவசாய நிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து குருபரப்பள்ளியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்திற்கு விவசாய நிலங்களை எடுப்பதை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு நிர்வாகிகள் சுந்தரேசன், கிருஷ்ணன், பிலால், வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கூட்டமைப்பு நிர்வாகி ஸ்டாலின் பாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், குருபரப்பள்ளி சுற்றுவட்டாரத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கோரிக்கை குறித்து போராட்ட அமைப்பினர் கூறியதாவது:-
மாற்றுவழி
தமிழக அரசு எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. எண்ணேகொள்புதூர், போடரப்பள்ளி, விநாயகபுரம், மயாண்டப்பள்ளி சோமநாதபுரம், குருபரப்பள்ளி, பில்லனகுப்பம், சாமந்தமலை, வழியாக பெரிய ஏரியில் தண்ணீரை கொண்டு சேர்க்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகளின் நிலம், வீடுகள் பறிபோகும் சூழல் உள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். மேலும் இத்திட்டத்திற்காக, 29 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் அமைக்க வேண்டும். ஆனால் புதூர், எண்ணேகொள்புதூர், குருபரப்பள்ளி, புளியஞ்சேரி, பீமாண்டப்பள்ளி, குப்பச்சி பாறை வழியாக மாற்று வழியில் கொண்டு சென்றால், 8½ கிலோ மீட்டர் தூரம்மட்டுமே ஆகும்.
இதில், எந்த விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதில்லை. எங்களது கோரிக்கையை முற்றிலும் அரசு ஏற்கும் வரை அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் வருகிற 25-ந் தேதி குப்பச்சிபாறை அருகே, 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள்கூறினார்கள்.