சிபிசிஎல் நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி கடந்த 11 நாட்களாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர்.
நாகை,
நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலை உள்ளது. இந்த ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் 11-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து இன்று மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அத்துடன், போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளும் படிப்படியாக திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 11 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.