கருப்புத்துணியால் கண்களை கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்
கருப்புத்துணியால் கண்களை கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சிந்தாமணி அண்ணாசிலை அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 31-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. இதனை கண்டிக்கும் வகையிலும், மத்திய அரசை கண்டித்தும், அரைநிர்வாணத்துடன் கண்களில் கருப்புத்துணியை கட்டிக் கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினார்கள். இந்தநிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. திருச்சியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த இடத்துக்கு சென்று, அய்யாக்கண்ணுவிடம் தனது ஆதரவை தெரிவித்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.