தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்


தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2023 2:45 AM IST (Updated: 13 July 2023 2:46 AM IST)
t-max-icont-min-icon

கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.140 வழங்க கோரி பொள்ளாச்சியில் விவசாயிகள் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.140 வழங்க கோரி பொள்ளாச்சியில் விவசாயிகள் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்


கொப்பரை தேங்காய் விலை கிலோவுக்கு ரூ.140 வழங்க வேண்டும். உரித்த தேங்காய் விலை கிலோ ரூ.50 நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தை மீண்டும் கோவைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். விவசாயிகள் தேங்காய்களை ரோட்டில் போட்டு உடைத்தனர். இதில் கோவை மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பட்டீஸ்வரன் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இறக்குமதிக்கு தடை

இதுகுறித்து மாநில தலைவர் மதுசூதனன் கூறியதாவது:-

தென்னையை வைத்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைத்த விவசாயிகளுக்கு கடந்த ஓராண்டாக தேங்காய் விலை வீழ்ச்சியால் கடுமையாக பிரச்சினை வருகிறது. மத்திய அரசு தாராளமாக வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதால் தேங்காய் எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும். கொப்பரை தேங்காய் விலை கிலோவுக்கு ரூ.140 வழங்கி உரிய முறையில் கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனவே நேரடியாக தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தென்னை சார் தொழில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்தக்கட்டமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோன்று சுல்தான்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடந்தது.



Next Story